பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி
வெற்றி நிச்சயம்!
பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி!
தமிழக அரசு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் பயிற்சி!
குடும்பம் மற்றும் சமுதாயத்தின் ஆதாரமான மகளிருக்கு மலர்ச்சி!
பெரம்பலூரை மையமாகக் கொண்டு பல்வேறு ஊர்களிலும், பிற மாநிலங்கள் மற்றும் சர்வதேச நாடுகளிலும் தனது தன்னிகரற்ற சுவையை கிளைபரப்பி வரும் அஸ்வின்ஸ் குழுமம், அவ்வப்போது பொதுநலன் சார்ந்த செயல்பாடுகளையும் முன்னெடுப்பது உண்டு.
அந்த வகையில் வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான பயிற்சிகளை அரசுடன் இணைந்து வழங்கவும் அஸ்வின்ஸ் குழுமம் முன்வந்துள்ளது. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின்கீழ், உழைக்கும் மகளிருக்கான இலவச திறன் பயிற்சியை வழங்கவும், அதன் நிறைவாக இயன்ற வேலைவாய்ப்புகளை நல்கவும் முடிவு செய்துள்ளது.
வெற்றி நிச்சயம்
தமிழ்நாடு அரசின் ’திறன் மேம்பாட்டுக் கழகம்’ வழங்கும் ‘வெற்றி நிச்சயம்’ பயிற்சி திட்டத்தின் கீழ், ‘உணவு மற்றும் பானங்கள் சேவை உதவியாளர்’ (Food & Beverage Service Assistant) பணிக்கான 45 நாட்கள் இலவச திறன் பயிற்சி முகாம் பெரம்பலூரில் தொடங்கப்பட்டுள்ளது. நியூ லைப் என்லைட்டன்மென்ட் & சேவா டிரஸ்ட் மற்றும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் இப்பயிற்சி முகாமின் தொடக்க விழா, பெரம்பலூர் கல்பாடி சாலையில் உள்ள அஸ்வின்ஸ் தலைமை வளாகத்தில் நேற்று (ஜூன் 02) நடைபெற்றது.
பல்லாயிரம் வேலைவாய்ப்புகள்
நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய அஸ்வின்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அஸ்வின் கணேசன், இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்துப் பேசுகையில், “இன்றைய சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பான வேலைவாய்ப்புகளை வழங்குவதில் ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் (Hospitality) தொழில்துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்துறைக்கு மிக உயரிய படிப்புகளை விட, பணிவன்புடன் பேசும் நல்ல குணமும், வாடிக்கையாளர்களைச் சரியாக உபசரிக்கும் திறனுமே முதன்மையான தேவையாகும்.
பலர் ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்ற தயக்கத்திலும், தொடக்க காலச் சூழலைச் சமாளிக்க முடியாமலும் வேலைகளைத் தவிர்க்கின்றனர். ஆனால், இந்தப் பயிற்சியின் மூலம் அவர்களுக்கு அவசியமான சுயநம்பிக்கையும், நிர்வாகத் திறன்களும் முழுமையாகக் கற்றுத்தரப்படும். அஸ்வின்ஸ் நிறுவனம் இன்று 44 கிளைகளுடன் தமிழ்நாடு முழுவதும் பரந்து விரிந்திருப்பதற்குக் காரணமே இத்துறையில் உள்ள தொடர் வாய்ப்புகள்தான். இந்தத் திறன் பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு உலகளவில் பல்லாயிரக்கணக்கான நல்வாய்ப்புகள் காத்திருக்கின்றன" என்ற நேர்மறையான தகவல்களுடன், வாழ்த்திப் பேசினார்.
பெண் எனும் பெரும் சக்தி
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்த, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் க.சிவக்குமார் பேசும்போது, “இந்தத் திட்டத்தின் பெயரே ‘வெற்றி நிச்சயம்’ என்று சூட்டப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 'வெற்றி நிச்சயம், நல்லதே நடக்கும்' என்ற வார்த்தைதான் இன்று ஒருவரை தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர வைத்துள்ளது. அதுவே தாரக மந்திரமாகவும் மாறியுள்ளது.
தமிழகம் முழுவதும் பெண்கள் பெருமளவில் தவெக-வுக்கு ஆதரவளித்து, வாக்களித்ததன் காரணமாகவே இன்று இத்தகைய ஆட்சி மாற்றம் சாத்தியமாகியுள்ளது. அந்தளவுக்கு பெண்களின் கைகளில் மிகப்பெரும் சக்தி உள்ளது.
‘வெற்றி நிச்சயம்’ பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவதற்காக, இங்கு வந்துள்ள 30-க்கும் மேற்பட்ட பெண்களும், தங்களுக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் தனிப்பட்ட மற்றும் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை சிறப்பாக உயர்த்திக் கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாதமும் புதிய பயிற்சியாளர்கள் இதில் இணைய உள்ளதால், உங்களுடைய நட்பு மற்றும் உறவினர் வட்டத்தின் பெண்கள் மத்தியிலும் இத்திட்டம் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் இதில் பங்கேற்கச் செய்யலாம்" எனக் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் பங்கேற்றோர் :
முன்னதாக, அஸ்வின்ஸ் குழுமத்தின் பயிற்சி திறன் மேலாளர் இர்பான் தொடக்க உரையாற்றினார். அஸ்வின்ஸ் குழுமத் தலைவர் செல்வகுமாரி கணேசன் முன்னிலை வகித்தார். ‘உதிரம் அறக்கட்டளை’ சமூக செயல்பாட்டாளர் ம.நாகராஜ் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வின் நிறைவாக, நியூ லைப் என்லைட்டன்மென்ட் & சேவா டிரஸ்ட் முதன்மை செயல் அதிகாரி கி. தினகரன் நன்றி கூறினார்.
தவெக சார்பில் அதன் மாவட்ட துணைச்செயலாளர் ஈஸ்வரன், நகர செயலாளர் வில்லு விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர். அஸ்வின்ஸ் நிறுவனத்தின் சார்பில் மனிதவளத் துறை பிரிவைச் சேர்ந்த மகேஸ்வரன், மணிபாரதி முத்தமிழ், அலுவலக மேலாளர் சசிகுமார், உணவக மேலாளர் சூரி என்ற வெங்கடேசன் உள்ளிட்டோரும் உடன் கலந்து கொண்டனர்.
