தெற்கு ரயில்வேயின் ‘டாப் 50’ பட்டியலில் வள்ளியூர்: ரூ.14.82 கோடி வருவாய் ஈட்டி சாதனை!
நெல்லை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் அதிக வருவாய் ஈட்டும் முக்கிய 50 ரயில் நிலையங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான வள்ளியூர் ரயில் நிலையம் 39-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
ரூ.14.82 கோடி வருவாய்:
பயணிகளின் வருகை மற்றும் டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் கணக்கிடப்பட்டது. அதன்படி, கடந்த நிதியாண்டில் மட்டும் வள்ளியூர் ரயில் நிலையம் ரூ.14,82,40,034 (பதினான்கு கோடியே எண்பத்திரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து முப்பத்து நான்கு ரூபாய்) வருவாயை ஈட்டித் தந்துள்ளது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் இந்த ரயில் நிலையத்தை பெருமளவில் பயன்படுத்தி வருவதால், இதன் வருவாய் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. தற்போது ‘C’ பிரிவு அந்தஸ்தில் உள்ள இந்த ரயில் நிலையத்தில், தினமும் 39 ரயில்கள் நின்று செல்கின்றன.
முக்கியத்துவமும் பின்னணியும்:
வள்ளியூர் ரயில் நிலையத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு அதன் புவியியல் அமைப்பும், சுற்றியுள்ள முக்கிய அரசு நிறுவனங்களுமே முக்கியக் காரணமாகும்.
-
கூடங்குளம் அணுமின் நிலையம்
-
இஸ்ரோ (ISRO) விண்வெளி மையம்
-
ஆசியாவின் மிகப்பெரிய கடற்படை தளமான INS கட்டபொம்மன் தளம்
-
நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா (AMRL)
ஆகியவை வள்ளியூரின் அருகிலேயே அமைந்துள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (CISF) கீழ் இயங்கி வரும் இஸ்ரோ மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையப் பணியாளர்கள், அதிகாரிகள் தங்களின் தொழில் நிமித்தமான பயணங்களுக்கு இந்த வள்ளியூர் ரயில் நிலையத்தையே பிரதானமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை:
வள்ளியூர் ரயில் நிலையம் இவ்வளவு பெரிய வருவாயைத் தந்தபோதிலும், பல்வேறு முக்கிய ரயில்கள் இங்கு நிற்காமல் செல்வது பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிற்காமல் செல்லும் முக்கிய ரயில்கள்:
சென்னை வந்தே பாரத் விரைவு ரயில், சென்னை வாராந்திர விரைவு ரயில், வட இந்தியாவிற்குச் செல்லும் ஹௌரா விரைவு ரயில், நியூ ஜல்பைகுரி செல்லும் அம்ரித் பாரத் விரைவு ரயில் மற்றும் டெல்லி நிஜாமுதீன் விரைவு ரயில்.
இந்த ரயில்கள் அனைத்தும் வள்ளியூரில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலுத்து வருகிறது. இந்த ரயில்களுக்கு இங்கு ஸ்டாப்பேஜ் (Stoppage) வழங்கப்பட்டால், பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதுடன், ரயில்வே நிர்வாகத்திற்கு தற்போதைய வருவாயை விட கூடுதல் வருவாய் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, இங்கு கூடுதல் வசதிகளை மேம்படுத்தவும், ரயில்கள் நின்று செல்லவும் ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
