கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு
கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு
கட்டுமானப் பணிகளை தொய்வின்றி முடிக்க உத்தரவு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கொட்டரை நீர்த்தேக்கத்துக்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி நேற்று (ஜூன் 03) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகள், 33 அணைக்கட்டுகள் மற்றும் 2 நீர்த்தேக்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் வரிசையில் கொட்டரை நீர்த்தேக்கத் திட்டமானது ரூ.92.70 கோடி மதிப்பீட்டில் 815 ஏக்கர் பரப்பளவில் 212.475 மில்லியன் கன அடி நீரை தேக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
நீர்த்தேக்கப் பணியைப் பார்வையிட்ட ஆட்சியர், நில கையகப்படுத்தல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், திருத்திய நிர்வாக மதிப்பீடு-3 ஒப்புதல் கிடைத்தவுடன் மீதமுள்ள கட்டுமானப் பணிகளை எவ்வித தொய்வுமின்றி விரைவாகத் தொடங்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனையடுத்து, காரை அரசு மருத்துவமனையைப் பார்வையிட்ட ஆட்சியர், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் விவரங்கள், மருந்து இருப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள், உள்நோயாளிகள் பிரிவு, பரிசோதனை அறைகள் மற்றும் கழிவறை வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் மருத்துவர்களின் சேவை குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது பொதுசுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து, மருதையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மு.பாண்டியன், உதவிச் செயற்பொறியாளர் கு.புகழேந்தி, உதவிப் பொறியாளர் த.பார்த்திபன், ஆலத்தூர் வட்டாட்சியர் கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
