தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி
உடனடி வேலைக்கும் உத்திரவாதம்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடத்தப்படும் ‘வெற்றி நிச்சயம்’ திறன் மேம்பாட்டு பயிற்சியின் முடிவில், அரசு சான்றிதழுடன் உதவித்தொகையாக ரூ.12,000 வழங்கப்படும் என்றும், பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அஸ்வின்ஸ் நிறுவனத்திலேயே உடனடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் இந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம்
அரசு படித்தும் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ, மாணவியருக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் ’வெற்றி நிச்சயம்’ என்ற முன்மாதி திட்டம், ஓராண்டு முன்னதாக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, இத்திட்டத்தின் மூலம் 75,000 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்குவதும், இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சி அளித்து தமிழ்நாட்டை திறன் மேம்பாட்டில் முன்னிலைப்படுத்துவதுமாகும்.
‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் 38 தொழிற்பிரிவுகளில் 165 வகையான திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பயிற்சிக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும். பயிற்சியின் போது மாதம் ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அவசியமெனில் தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியும் செய்யப்படுகிறது. பயிற்சியின் முடிவில் தொழில்துறை அங்கீகார சான்றிதழ் வழங்கப்படுகிறது.
டாடா, எல்ஜி, அப்பல்லோ, அசோக் லைலேண்ட், எம்ஆர்எஃப் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இணைந்து பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் தொடங்கின. மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், இலங்கைத் தமிழர்கள், மீனவர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட பின்தங்கிய பிரிவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலையில்லாத இளைஞர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ’Skill Wallet’ செயலி மூலமாகவோ அல்லது https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ என்ற இணையதளம் மூலமாகவோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார், வங்கி பாஸ்புக், கல்விச் சான்றிதழ், சாதிச் சான்று, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியமாகும்.
இத்திட்டம் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரித்து, தமிழ்நாட்டின் திறன் மேம்பாட்டுக்கு பெரும் பங்களிப்பை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. முந்தைய அரசின் வெற்றிகரமான இத்திட்டத்தை, அரசியல் மாச்சரியம் ஏதுமின்றி புதிய அரசு முன்னெடுப்பதும் வரவேற்புக்குரிய மாற்றமாகும்.
