விறைப்பான காக்கி உடுப்புக்குள் மறைந்திருக்கும் மனித நேயம் நெருக்கடி பணிச்சூழலுக்கு மத்தியிலும் பாசப்பகிர்வு சந்திப்பு காலமான காவல் நண்பர் குடும்பங்களுக்கு வாழ்நாள் உதவி
இதர துறைகளில் பணியாற்றுவோரை விட காவல்துறையினர் மத்தியில், பணி - குடும்பம் – பொதுவெளி என சகல திசைகளிலிருந்தும் சேரும் அழுத்தங்கள் ஏராளம். அவற்றிலிருந்து விடுபடவும், சற்றே இளைப்பாறவும், நெகிழ்ச்சியான நினைவுகளை சேகரிக்கவும் கிடைக்கும் வாய்ப்புகளும் அவர்களுக்கு அரிதானது. அப்படியான பின்னணியில், பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பிணைந்திருக்கும் காவலர் குழு ஒன்றின் 10 ஆண்டுகள் இடைவெளியிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. அச்சந்திப்பை அர்த்தமுள்ளதாக்கும் அவர்களின் சில முயற்சிகளும் அவர்களின் ஒன்றுகூடலை நெகிழ்ச்சிக்குரியதாக மாற்றியுள்ளது.
உள்ளங்கையில் இணையம் உலவும் காலத்தில் சஞ்சரிக்கும் தலைமுறை இது. ஆனால் அந்த இணையத்தின் உபயத்தில், உபயோகமானவற்றை செய்வோர் குறைவு. அப்படி, பெரம்பலூர் மாவட்ட காவலர்கள் பின்னணியில், நேர்மறை நோக்கங்களுடன் வாட்ஸ் ஆப் வாயிலாக இணைப்பில் இருப்போர், தங்கள் நெருக்கடியான பணிச்சூழலுக்கு மத்தியிலும் ஒன்றுகூடி, அந்த சந்திப்பையும் பொருள் கொண்டதாக மாற்றியுள்ளனர்.
தமிழக காவல்துறையில், 2016ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு அறிக்கை செய்து, அடிப்படை பயிற்சி முடித்து, பல்வேறு இடங்களில் பணிந்து வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை நண்பர்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த 2016 பேட்ச் நண்பர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (மே 17) நடைபெற்றது.
மொத்தம் 71 காவலர்களை உள்ளடக்கிய இந்த நண்பர்கள் குழு, தாங்கள் பணியில் அறிக்கை செய்ததன் அடிப்படையில், 10ஆம் ஆண்டு நினைவாகவும் இந்த ஒன்றுகூடலை சிறப்பாக கழிக்க நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தனர். தமிழகத்தின் பல்வேறு மூலைகளில் பணியாற்றியபோதும், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட இணையக் குழுக்கள் மூலம், தொடர் தொடர்பில் இருந்தபோதும், அரிதான நிகழ்வாக நேரடி சந்திப்பும் அதையொட்டிய பரஸ்பரம் குசல விசாரிப்பாகவும் இந்த ஒன்றுகூடல் அமைந்தது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அரங்கு ஒன்றில், இதற்கான ஒன்றுகூடலை தனிப்பட்ட வகையில் திட்டமிட்டிருந்தனர். எனினும், 71 காவலர்களை உள்ளடக்கிய குழுவின் 10ஆம் ஆண்டு ஒன்றுகூடலுக்காக தொடர் பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அவர்களில் 47 பேர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்க முடிந்தது. இதுதான் காவல்துறையில் பணியாற்றுவோர் நிலைமை. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நண்பர்கள் தங்களது கடைசி நேர பணிச்சூழல் காரணமாக, பெரம்பலூர் சந்திப்பை இழக்க வேண்டியதாயிற்று.
இதுதான் பணி நேரம், இதன் பிறகான பொழுதை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கழிக்கலாம் என்ற இலகுவான பணிச்சூழல் வாய்க்கப்பெறாத துறைகளில் முக்கியமானது காவல்துறை. எந்நேரமும் தலைக்குமேல் தொங்கும் கத்தியாக, நெருக்கும் பணிச்சூழல் அழுத்தங்கள் மத்தியில் உழல்வோராகவும் இவர்கள் இருக்கின்றனர்.
பணிசார்ந்த நெருக்கடிகளுக்கு அப்பால் பொதுவெளியிலும் காவலர்கள் மீது கட்டமைக்கப்படும் பிம்பங்களும், காவல்துறையினருக்கு தரும் அழுத்தங்கள் தனி! சமுதாயத்தின் அங்கத்தினராக, அவர்களின் மத்தியிலிருந்து காவல்துறைக்கு சென்றவர்கள் என்றபோதும், சமுதாயமானது தனது பொதுப்புத்தி காரணமாக, காவல்துறையில் பணியாற்றுவோரை தங்களிடமிருந்து சதா துண்டித்துக்கொள்வதே அதிகம் நடக்கிறது. இதனால் இணக்கமும், சுமுகமும் இழக்கப்பெறும் காவல்துறையினர் கூடுதல் அழுத்தங்களுக்கும் ஆளாகின்றனர்.
இதர துறைகளை விடவும், பிற மாநிலங்களின் சக போலீஸாரை விடவும், தமிழ்நாட்டு காவலர்களுக்கான ஊதிய விகிதங்கள் குறைவே! ஆனபோதும், காக்கி உடுப்புக்கான பெருமிதம், சமுதாயப் பங்களிப்பில் ஆர்வமுள்ளோருக்கு நிறைந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளிட்டவற்றுக்காக இந்த பணியில் விரும்பிச் சேருவோர் அதிகரித்து வருகின்றனர். ஆனால் நடைமுறையில், சமூக பங்களிப்புக்கான திருப்தியைவிட, கடமையாற்றும் நோக்கங்களில் பொதுசமூகத்தின் அதிருப்தியை சம்பாதிக்கும் துரதிருஷ்டமும் காவலர்களுக்கு அநேகம் வாய்ப்பாகிறது.
ஆனபோதும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, கல்லுக்குள் ஈரமாய், காக்கி உடுப்புக்குள் கசியும் மனித நேயமாக, காவல்துறையை சேர்ந்த பலரும், தங்களால் இயன்றவற்றை சத்தமின்றி சமுதாய இணக்கத்துக்காக செய்தும் வருகின்றனர். இந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளாக, பணியில் சேர்ந்ததன் அடிப்படையில் வாட்ஸ் ஆப் வாயிலாக இணைந்திருந்த காவல்துறை நண்பர்கள் தங்கள் 10ஆம் ஆண்டு கூடலை அர்த்தமுள்ளதாக்கவும் முயன்றனர்.
இதன் பொருட்டு, நேற்றைய நேரடி சந்திப்பை அடுத்து, செஞ்சேரி வித்யாஷரம் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி பள்ளிக்கு செல்லும் சிறாருக்கு உதவும் வகையில், அவர்களுக்கு இனிப்புகளுடன் ஸ்கூல் பேக் ஒன்றையும் வழங்கி மகிழ்ந்துள்ளனர். மேலும், காவல்துறையினர் சமுதாயத்தின் நண்பர்கள் என்ற சாரமிழந்த வாசகத்துக்கு சற்றே ஈரம் சேர்க்கும் வகையிலான வரிகளையும் அந்த ஸ்கூல் பையில் சேர்த்திருந்தனர்.
முன்னதாக, தங்களோடு பணியில் சேர்ந்து இடையில் அகால மரணமடைந்த சக பேட்ச் அங்கத்தினரான காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவர்களின் குடும்பத்துக்கு உதவும் ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து செய்திருந்தனர். இதன்படி குடும்பத் தலைவரை இழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ24 லட்சம் உதவித்தொகையை சிறுகச்சிறுக சேகரித்து காவல்துறை உயரதிகாரிகள் முன்னிலையில் உரியவர்களுக்கு ஒப்படைக்கும் செயற்கரிய முயற்சியையும் சாதித்துள்ளனர்.
இதன் பொருட்டு நேற்றைய சந்திப்பில், இன்னுயிரை இழந்த தங்கள் நண்பர்களான பிரவீஸ், ரமேஷ், சுரேஷ் ஆகியோருக்கான அஞ்சலி, நினைவுகூறல் ஆகியவற்றையும் பகிர்ந்து மனம் ஆறினர். இழந்த நண்பர்கள் குறித்தான நினைவுப் பகிர்வுகள் வாயிலாக, நெருக்கடி மிக்க காவல்துறையினர் தங்கள் உடல், மன ஆரோக்கியத்துக்கான அக்கறைகளையும் அப்போது பகிர்ந்து கொண்டனர்.
இந்த சந்திப்பை வண்ணமயமாக்கும் முயற்சியாக, அனைவரும் ஒரே நிறத்திலான பாரம்பரிய உடையை அணிந்து, குழு புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். குழுவில் இருப்போர் அனைவரும் 35 மற்றும் அதையொட்டிய வயதினை உடையவர்கள் என்பதால், கல்லூரி மாணவருக்கு இணையான இளமையும், குதூகலமும் இந்த சந்திப்பில் பிரதிபலித்தது. அதையொட்டிய மகிழ்ச்சியான நினைவுப் பரிமாறல் மூலம், ஆண்டுநெடுக நீடித்த பல்வேறு அழுத்தங்களில் இருந்தும் விடுபட்டவர்களாக நேற்றைய தினத்தின் சில மணி நேரங்களை சேர்ந்து கழித்தனர்.
சந்திப்பை மேலும் இணக்கமாக்கும் வகையிலான சிறு விளையாட்டுகள், அதைத் தொடர்ந்து மதியம் அறுசுவை உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். பணி சார்ந்த அனுபவப் பகிர்வும் இந்த சந்திப்பில் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் முன்னோடி காவலர்களின் அனுபவங்கள், மற்றவர்களுக்கு உதவிகரமாகவும் வாய்ப்பானது.
இதர துறையினர் போன்று, அதிகாரபூர்வமாக பிணைந்திருக்கவும், செயல்படவும் வாய்ப்பில்லாத காவல்துறையினர், தங்கள் மத்தியில் இன்னுயிர் ஈந்தவர்களை நினைவுகூரவும், அவர்தம் குடும்பத்தினருக்கான வாழ்நாள் உதவிகளை ஒருங்கிணைக்கவும், காவல்துறைக்கு அப்பால் சமுதாயப் பங்களிப்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உதவும் நோக்கிலுமாக இந்த சந்திப்பை அர்த்தமுள்ளதாக்கி சென்றுள்ளனர்.
வதந்திகள் பரப்பவும், வறட்டு அரட்டைகள் நிகழ்த்தவும், பொருளற்ற காப்பி பேஸ்ட் குப்பைகளுமே பெரும்பாலான வாட்ஸ் ஆப் குழுக்களில் நிறைந்திருக்கும். ஆனால், உள்ளங்கை இணையம் சாத்தியமாக்கும் வாட்ஸ் ஆப் குழுவை, தங்களுக்கும் சமுதாயத்துக்கும் பயனளிக்கச் செய்வோர் குறைவு. அதற்காக, மேற்படி நண்பர்களை வாட்ஸ் ஆப் குழுக்களின் வாயிலாக ஒருங்கிணைத்து நிர்வகிக்கும், அட்மின் பொறுப்பாளர்களின் அக்கறை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவையும் இந்த சந்திப்பில் நன்றியுடன் சிலாகிக்கப்பட்டன.
