சோழர் கால செப்பேடுகள் மீட்பு: முதல்வர் ஜோசப் விஜய்யின் மௌனம் ஏமாற்றம் அளிக்கிறது! வானதி சீனிவாசன் சாடல்
சென்னை:
நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து சோழர் காலத்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகள் தாயகம் திரும்பியுள்ள நிலையில், அதற்குப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்காத தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம்:
தமிழ் வரலாறு மீது அலட்சியமா?
"தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டு கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ் வரலாறு மீது எவ்வளவு அலட்சியம் இருக்க வேண்டும்? இதுதான் உங்களது 'நாகரிக அரசியலா' ஜோசப் விஜய் அவர்களே!
ஒட்டுமொத்த தமிழகமும் பிரதமரைப் பாராட்டி, இந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாடும் வேளையில், நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் தாயகம் திரும்பிய மகத்தான நிகழ்வுக்கு, தமிழக முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் இதுவரை மெத்த மௌனத்தையே சாதித்திருக்கிறீர்கள். இது வெறும் மறதியல்ல, திட்டமிட்ட அலட்சியம் என்றே தோன்றுகிறது.
பெட்ரோல் விலைக்கு அறிக்கை, பெருமைக்கு மௌனமா?
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றால் உடனடியாக அறிக்கை கொடுக்கும் உங்களுக்கு, தமிழ் பண்பாட்டையும் சோழர் வரலாற்றையும் உலகுக்கு மீண்டும் பறைசாற்றிய பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லக்கூட தயக்கம் வருகிறதா?
'மாற்றம்' என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த உங்களின் நடவடிக்கைகள், கடந்த கால ஆட்சிகளை விட எந்த விதத்திலும் வித்தியாசமில்லை. தமிழர் வழிமரபில் வந்த நீங்கள், நமது தமிழ் வரலாறு மீட்டெடுக்கப்படும் போது அதற்குப் பாராட்டு தெரிவிக்காமல் இருப்பதுதான் நாகரிக அரசியலா? உங்களால் மாற்றம் வரும் என்று நம்பி ஓட்டுப் போட்ட மக்களை இந்த மௌனம் ஏமாற்றுகிறது."
தமிழக அரசுக்குக் கோரிக்கை
மேலும், "நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்டு தமிழகத்திற்கு வரும் சோழர் காலச் செப்பேடுகள் வரும் நாளை, தமிழக அரசு வரலாற்று நிகழ்வாகச் சிறப்பாகக் கொண்டாடிட வேண்டும்" எனவும் வானதி சீனிவாசன் தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
