பெரம்பலூர் சங்குப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் வைகாசி அமாவாசை சிறப்பு பூஜை
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியின் 19-வது வார்டுக்கு உட்பட்ட சங்குப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில், வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதான நிகழ்வு நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், திரவியப்பொடி, ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு வண்ணமயமான மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழவும், தனதானியம் பெருகி வளம் பெறவும் வேண்டியே இந்த அமாவாசை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
பூஜையைத் தொடர்ந்து, 19-வது வார்டு அன்னதான குழுவினரின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோயில் நிர்வாகி கண்ணபிரான், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
